தமிழகத்தில் நேற்று(ஏப்.9) வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்தது. இதில் 763 பேர், டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் நான்கரை லட்சம் பேருக்கு இந்நோய் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோய் பரவியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 834 பேருக்கு நோய் கண்டறியப்பட்டிருக்கிறது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:
தமிழகத்திற்கு வெளி மாநிலங்களுக்குச் சென்று திரும்பிய 59,919 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 213 பேர் தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். 32,296 பேர் தனிமைப்படுத்தி 38 நாட்கள் முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இது வரை 7267 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஏப்.8ம் தேதி வரை 738 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று(ஏப்.9) புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 84 பேர் டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். மீதி 12 பேரில் 3 பேர் வெளிமாநிலம் சென்று திரும்பியவர்கள் மற்றும் 8 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் ஆவார். டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் 1480 பேர் பரிசோதிக்கப்பட்டதில், 554 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களுடன், உறவினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களையும் சேர்த்தால் 763 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, 834ல் இந்த 763 பேர் போக மீதி 71 பேர் மட்டுமே வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டவர்கள்.
விமான நிலையங்கள், மாநில எல்லைகளில் இது வரை 14 லட்சத்து 61487 பேருக்கு பொதுவான சோதனை நடத்தப்பட்டது. புதிதாக ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ் என்ற விரைவான சோதனை மேற்கொள்ளும் கருவிகள் நாளை முதல் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் ஒருவருக்கு 30 நிமிடங்களில் கொரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனை நடத்தி விடலாம்.
இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.