சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மருத்துவமனையிலேயே தங்குகிறார்கள். தமிழகத்தில் நேற்று வரை 834 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இது வரை இந்நோய்க்கு 8 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ் மூலம் அதிகமானோருக்குப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவக் கூடாது என்பதற்காக அந்த மருத்துவமனையிலேயே அவர்களுக்குத் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இதையடுத்து, மருத்துவமனை வளாகத்திலேயே டாக்டர்கள் உள்படச் சுகாதார பணியாளர்களுக்குத் தங்குவதற்குத் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.