மருத்துவப் பணியாளர்களைக் கொச்சைப்படுத்தும் ஸ்டாலின்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கொரோனா விவகாரத்தில் ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது தன்னலமற்று வேலை செய்யும் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று முதன்முதலாகக் கேரளாவில் வந்தது முதல் அ.தி.மு.க. அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது. நோய்த் தொற்று சம்பந்தமாக நாள்தோறும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டு வருகின்றது.


அதே போல, வேறு எந்த மாநிலங்களும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தது, சர்வதேச பயணிகளை விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்திக் கண்காணிப்பில் வைத்தது. அதன் தொடர்ச்சியாக மாநில எல்லைகள் மூடப்பட்டது.

கடந்த மார்ச் 15ம் தேதி முதல் பொது இடங்களில் கூடத்தடை உத்தரவு, பூந்தமல்லி, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மிகச் சரியான நேரத்தில் அரசு எடுத்து வந்ததைச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பாராட்டியுள்ளார். சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இந்நோய்த்தொற்று உள்ளது என்று அறிந்தவுடனேயே, ஜனவரி மாதத்திலேயே இந்நோயினைக் கண்டறியும் பரிசோதனைக்கருவிகள், முழு உடல் கவச உடைகள், மருந்துகள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஆணை வழங்கிய தீர்க்கதரிசியான அரசு இது.இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 969 ஆகும். நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் பொருட்டு, வீடு வீடாகக் கண்காணிப்பு நடத்துவதற்கான விரிவான உள்ளூர் கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளில் உள்ள சுமார் 59 லட்சம் மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 32371 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளும், 3,371 வெண்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைத்துள்ளதுடன், தற்சமயம் 20 சோதனை மையங்களையும் குறுகிய காலத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும், எதிர்கால திட்டமிடலுக்காக, ஒரு லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட 5,713 தனிமைப்படுத்தும் கட்டிடங்கள், அரசு மற்றும் தனியார்த் துறை கட்டிடங்களில் கண்டறியப்பட்டு உள்ளன.போதுமான அளவிற்கு மூன்றடுக்கு முக கவசங்கள், என்-95 முக கவசங்கள் மற்றும் கவச உடைகளும் இருப்பில் உள்ளன. இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு நில்லாமல், மருத்துவர்களின் தேவையினை கருத்தில் கொண்டு, புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,558 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், களப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கான முழு மருத்துவச் செலவினையும் அரசே ஏற்பதுடன், 2 லட்சம் ரூபாய் அவர்களுக்கு வழங்கும். துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் நேர்வுகளில், ரூ.10 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியின் மூலம் நிவாரணம் வழங்கவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.ஊரடங்கினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் களையும் வகையில், இந்தியாவிலேயே முதன்முதலாக, ஊரடங்கு அமலுக்கு வரும் முன்னரே, கொரோனா சிறப்பு நிவாரணத் தொகுப்பினை 3,280 கோடி ரூபாய் செலவில் அறிவித்து, அதனை உரிய நேரத்தில் அளித்து, பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்.

சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது.
தமிழகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சினையான கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் பணிக்குச் சட்டமன்ற உறுப்பினர் நிதி பயன்படுத்துவதை வரவேற்காமல், அதற்குக் கண்டனம் தெரிவிப்பது இவர்களின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. தமிழ்நாடு அரசுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக 510 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, 48 கோடியே 24 லட்சம் ரூபாயினை தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு வழங்கியுள்ளது.

மேலும், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 312 கோடியே 64 லட்சம் ரூபாயினை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் காரணமாகத் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நமது திறமை வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் முயற்சியால், தமிழ்நாட்டில் இறப்பு விகிதமும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பிரதமருடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறைச் செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், இந்த அரசின் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இத்தருணத்தில் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது; இது அவரது சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது. எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது, தன்னலமற்று பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், தூய்மைப்பணியாளர்கள் போன்ற பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!