கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு, தமிழக அரசு வழங்க வேண்டுமென்று திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் தினக் கூலிகள் உள்பட பல்வேறு முறைசாரா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு கொடுத்த ரூ.1000 போதவில்லை என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கை நீட்டிப்பு, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற விஷயங்கள் குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி, கருத்துக்களைக் கேட்டு செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்படப் பலரும் கோரிக்கை விடுத்தனர். கர்நாடகா உள்படப் பல மாநிலங்களில் அம்மாநில முதல்வர்கள், அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி விவாதித்தனர். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து, திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன், தி.க.தலைவர் கி.வீரமணி, காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கொரோனா நோயால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, தமிழக அரசு தர வேண்டும். மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் தர வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்படப் பல தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.