கொரோனா பரிசோதனையில் ரேபிட் கிட் சோதனை, முதல் கட்டமாகச் சேலம் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. ஒருவருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குத் தமிழக அரசு, சீனாவில் உள்ள கம்பெனிகளிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், இந்தியாவுக்கு வர வேண்டிய முதல் கன்டெய்னரை அமெரிக்கா தட்டிப் பறித்து விட்டது. இதனால், தமிழகத்திற்குக் கடந்த 10ம் தேதி வர வேண்டிய ஒரு லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ் வராமல் போனது.
இதற்கிடையே மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி, மாநில அரசுகள் நேரடியாக என்95 முகக் கவசம் கூட வாங்க முடியாது. மத்திய அரசுதான் மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்குத் தரும் எனக் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தற்போது சீனாவிலிருந்து ஆறரை லட்சம் பரிசோதனை கருவிகள் இந்தியாவுக்கு வந்தது. இதில், முதல் கட்டமாக வெறும் 24 ஆயிரம் ரேபிட் கிட்ஸ் மட்டும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது. இவற்றைப் பெற்ற தமிழக அரசு மாவட்டத்திற்கு ஆயிரம் வீதம் அனுப்பியது.
இந்நிலையில், சேலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி டீன் கூறுகையில், சேலம் மாவட்டத்திற்கு ஆயிரம் ரேபிட் கிட்ஸ் வந்தன. இவற்றைக் கொண்டு ஆயிரம் பேருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை விரைவில் அறியலாம். ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த ரேபிட் கிட்ஸ் பயன்படுத்தி சோதனை செய்வோம். அதிலும் சளி, இருமல் உள்ளவர்களுக்கு முதலில் பரிசோதிப்போம்.
ஏற்கனவே ஆர்டி-பிசிஆர் முறையில் ரத்தம், சளி பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் புனே இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பினோம். அதன்பிறகு சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதித்தோம். தற்போது சேலத்திலேயே பிசிஆர் டெஸ்ட் செய்யப்படுகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 896 பேருக்குப் பரிசோதித்ததில் ஒருவருக்கு கூட கொரோனா பாசிட்டிவ் வரவில்லை நாமக்கல், கரூரிலிருந்து வந்த மாதிரிகளும் சோதிக்கப்பட்டன.ரேபிட் கிட்ஸ் அடுத்தடுத்து வரும் போது அதிகமானோருக்குப் பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு டீன் தெரிவித்தார்.