தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3 லட்சத்து 45,357 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3.4 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி ஏராளமானோர் வாகனங்களில் ஊர் சுற்றுகின்றனர். உரிய அனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், அவர்களைக் கைது செய்து ஜாமீனில் விடுவித்து வருகின்றனர்.
இது குறித்து, தமிழக டி.ஜி.பி. அலுவலகம் இன்று(ஏப்.28) வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3 லட்சத்து 26,645 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 45,357 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 93,193 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 3 கோடியே 40 லட்சத்து 39,674 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 96,498 வாகனங்கள், அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 93,035 இருசக்கர வாகனங்கள், 837 மூன்று சக்கர வாகனங்கள், 2626 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.