தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 3 கோடியே 54 லட்சத்து 25,999 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 2162 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. கொரோனா பரவுவதை மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மதியம் ஒரு மணி வரை மட்டும் கடைகளுக்குச் செல்வதற்கு மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
இதற்குப் பிறகு வெளியில் சுற்றுபவர்களிடம் இருந்து காவல்துறையினர் வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இன்று(ஏப்.30) காலை 9 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் 3 லட்சத்து 65,747 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 3 லட்சத்து 9026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளை மீறியவர்களிடம் 3 கோடியே 54 லட்சத்து 25,999 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.