தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்தது. சென்னையில்தான் அதிகபட்சமாக 1458 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் சராசரியாக 200 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் நேற்று(மே3) 266 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாகப் பாதித்த 266 பேரில் 187ஆண்கள், 79 பெண்கள் ஆவார்.
அதே சமயம், மாநிலத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் ஒரு லட்சத்து 40,716 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் கோயம்பேடு சந்தையில் கடந்த 25ம் தேதி ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கூடியதால், அங்கு வந்து சென்ற சென்னை மக்கள், வெளியூர்களுக்குச் சரக்கு வாகனங்களில் திரும்பிய தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதனால், கொரோனா வைரஸ் பல மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 203 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 1458 ஆனது. இது தவிர அரியலூர் 2, கோவை 4, கடலூர் 9, கள்ளக்குறிச்சி 6, கிருஷ்ணகிரி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 2, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.