டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை மறுநாள்(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. எனினும், பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
மத்திய அரசு கடந்த 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகம், ஆந்திரா உள்படப் பல மாநிலங்களில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கெல்லாம் 2 வது நாளாக இன்றும் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கடைகளை, சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக் கூடங்களை (பார்) திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கர்நாடகம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபான கடைகளை வரும் 7ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
இதன்படி, கொரோனா நோய் பரவியுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக் கடைகள் மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும். மதுபான கடைகளில் ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் ஆறு அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும். மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில்5 நபர்களுக்கு மேல் நிற்க அனுமதிக்கக் கூடாது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மதுபான கடைகளில் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். மதுபானக் கடைகளில் பார்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.