சிறுமி எரித்து கொலை.. அதிமுகவினர் மீது நடவடிக்கை.. ஸ்டாலின் வலியுறுத்தல்..

Stalin seeks strong action against Admk men in villupuram girl murder.

by எஸ். எம். கணபதி, May 11, 2020, 14:39 PM IST

சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயின் கை கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணற வைத்து; சிறுமியைத் தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயஸ்ரீ, நீதித்துறை நடுவரிடம் இதுகுறித்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 95 சதவீத தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி இறந்து விட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்கவே செய்யும்.கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பேருந்தைத் தர்மபுரியில் தீக்கிரையாக்கி, மாணவியர் மூவரையும் கருக்கி, கதறக் கதறக் கொன்றதற்குக் காரணமானவர்கள் அ.தி.மு.க.,வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.

சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீகள் போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்குச் செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவியுள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதையும், ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்து விடாமல், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading சிறுமி எரித்து கொலை.. அதிமுகவினர் மீது நடவடிக்கை.. ஸ்டாலின் வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை