ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் தொடர்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறோம். தமிழகத்தில் தினமும் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டம், கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. மருத்துவக் குழுவின் ஆலோசனைகளைக் கேட்டு, ஊரடங்கு தளர்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
பட்டியலினத்தவரை அவமதித்தாலேயே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். அவர் இழிவாகப் பேசிய போதே ஸ்டாலின் அவரை கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக அரசின் மீது ஸ்டாலின் புகார் சொல்வது கண்டிக்கத்தக்கது.
ஆர்.எஸ்.பாரதி என்ன புகார் கொடுத்து விட்டார்? அவர் ஏதோ விஞ்ஞானி போல் பத்திரிகை விளம்பரத்திற்காகப் புகார் கொடுத்து வருகிறார். அரசின் இ-டெண்டரில் முறைகேடு செய்ய முடியாது.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.