திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூன் 1ல் திறக்கப்பட உள்ள நிலையில், திருப்பதி லட்டு விற்பனை மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி முடிவடைகிறது.
ஊரடங்கு தொடங்குவதற்கு 3 நாள் முன்பே திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டது. நாட்டிலேயே அதிக வருவாயைக் கொண்ட இந்த கோயிலில் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள், பெருமாளை வணங்கி வந்தனர். தற்போது மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவதால், ஜூன் 1ம் தேதி மீண்டும் கோயில் நடை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் போர்டு, ஆந்திர அரசிடம் அனுமதி கோரியுள்ளது. மேலும், ஜூனில் கோயில் திறந்தாலும் ஆரம்பத்தில் தினமும் 25 முதல் 30 ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிப்பது, சமூக விலகலைப் பின்பற்றுவது என்று கோயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில், திருப்பதி கோயில் லட்டு விற்பனையை இன்றே நிர்வாகம் தொடங்கி விட்டது. ஆந்திராவில் உள்ள தேவஸ்தான மண்டபங்கள், விற்பனை நிலையங்களில் இன்று(மே27) காலை முதல் லட்டு விற்பனை தொடங்கியுள்ளது. ஆன்லைனில் பெற விரும்பும் பக்தர்கள், அதில் பதிவு செய்து விட்டு அருகில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் லட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.