சென்னையில் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான், கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மாவட்டக் கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ கான்பரன்சில் ஆலோசித்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில்தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. மேலும், சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால், கொரோனா பரவுகிறது.
தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சை அளிப்பதால்தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் தான் கொரோனா பரவலை ஒழிக்க முடியும். மக்கள் கொரோனா நோய் அறிகுறி ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தமிழக அரசு மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் அதிகளவில் வாங்கி வருகிறது.
தமிழகத்திலிருந்து 170 ரயில்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.