மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவரும், நீண்ட காலமாக திமுக தலைவராக பணியாற்றியவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருப்பதால், பிறந்த நாள் விழாவை எளிமையாகக் கொண்டாடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி உள்ளிட்டோர் அறிவாலயத்திற்கு இன்று காலை வந்தனர். அங்குக் கலைஞரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சென்றனர். நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதே போல், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள், மறைந்த கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.