தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 220 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா உலக நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது.
நேற்று(ஜூன்5) மட்டும் புதிதாக 1384 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், குவைத்தில் இருந்து வந்த ஒருவர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 5 பேர், தெலங்கானா 4 பேர், கேரளா ஒருவர் என்று 11 பேரும் அடக்கம்.
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 585 பேரையும் சேர்த்து மொத்தம் 14,901 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 12 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 15,991 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 5 லட்சத்து 28000 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் தினமும் 1000 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று அதிகபட்சமாக 1072 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 18,670 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் 169 பேர், திருவள்ளூரில் 44 பேர், திருச்சி, விழுப்புரம் தலா 7 பேர், விருதுநகர் 8 பேர், நாகை, கடலூர் 5 பேர் என்று நேற்று கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.