தமிழகத்தில் அரசு அறிவித்தபடி ஜூன் 15ம் தேதியன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது வரும் 11ம் தேதி, ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பில் தெரிய வரும்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதாலும், பல மாவட்டங்களில் கொரோனா பரவி விட்டதாலும் இந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது.
ஆனால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பின்னர், மே 12ம் தேதியன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில் ஜூன்1-ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மே31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து விட்டு, ஜூன் 1ம் தேதி முதல் தேர்வு எப்படி நடத்த முடியும்? பஸ், ரயில் ஓடாத நிலையில் வெளியூர்களில் முடங்கியுள்ள மாணவர்கள் எப்படித் திரும்ப முடியும்? என்று கேள்விகளை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு, அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஜூன் 15ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆனால், கடந்த சில நாட்களாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 22 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 32 ஆயிரத்தை எட்டி விட்டது.
தினமும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவுவதால், மாணவர்களுடன் உயிரோடு விளையாடாமல் 10, 11, 12ம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர்.
இதற்கிடையே, தேர்வை 2 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பக்தவச்சலம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்து தமிழக அரசின் பதிலைக் கேட்டனர்.
இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி, 10ம் வகுப்புத் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்து வைக்கப்பட்டு விட்டது. கிருமிநாசினி தெளிப்பது உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்படுகிறது. மாணவர்களுக்குப் பாதுகாப்பாகத் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். தேர்வு எழுதும் முன்பும், பின்பும் பரிசோதனை செய்யப்படும். இப்போது 10ம் வகுப்புத் தேர்வு நடத்தாவிட்டால், பின்னாளில் நடத்துவது மிகவும் சிரமம். காரணம், அடுத்த மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே, தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதன்பின், பொதுத் தேர்வை ஏன் ஜூலை மாதத்திற்குத் தள்ளி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். எனவே, வரும் 11ம் தேதி ஐகோர்ட் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்தே 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும்.