10ம் வகுப்பு தேர்வு ரத்து.. திமுக போராட்டம் வாபஸ்..

Dmk cancells protest against 10th public exam.

by எஸ். எம். கணபதி, Jun 9, 2020, 14:36 PM IST

10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.ஊரடங்கு நேரத்தில் ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர் பாதுகாப்புக் கருதி, அந்தத் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் - ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அ.தி.மு.க. அரசினை வலியுறுத்தி வந்தார்கள்.


தமிழ்நாட்டில் 5.80 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்துள்ளோம் என்றும், 33229 பேர் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்திற்குச் செல்லும் என்றும், அரசே அறிவித்தும் கூட- மாணவர்களின் பாதுகாப்பு, தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் பாதுகாப்பு - மாணவர்களை அழைத்துவரும் தாய்மார்களின் பாதுகாப்பு குறித்த எவ்வித கவலையும் இல்லாமல் ஜூன் 15-ம் தேதி தேர்வை நடத்துவோம் என்று பிடிவாதமாக மீண்டும் அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து தி.மு.க. சார்பிலும், அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, “பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தியே தீருவோம்” என்று அரசு அடம்பிடித்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், “தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்?” என்று மிகவும் பொருத்தமாகக் கேள்வி எழுப்பிய பிறகும் கூட, அ.தி.மு.க. அரசு தனது தவறுணர்ந்து, கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.அரசியல் கட்சிகளின் கருத்தைக் கூட அல்ல - உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கவலையைக் கூட கருத்தில் கொள்ள நேற்றைய தினம் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு ஆணவத்துடன் மறுத்து விட்டது.

இந்நிலையில், திமுக உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆலோசித்து, அ.தி.மு.க. அரசின் மாணவர் விரோதப் போக்கினை கண்டிக்கும் வகையிலும், பத்தாவது வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் 10.6.2020 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று அவசரமாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, “மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படும். 'ஆல் பாஸ்' என்று அறிவிக்கப்படும்” என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது.
அதேசமயம், முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் - வீரியமும் அதிகமாக இருக்கின்ற இந்த நேரத்தில், தேர்வினை ரத்து செய்ததற்காகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்காகவும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மனப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பதால், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் 10ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. திமுக போராட்டம் வாபஸ்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை