பீகார், அரியானாவை விட ராயபுரத்தில் கொரோனா சாவு அதிகம்.. ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார்..

M.K.Stalin condemn Edappadi govt. on corona actions

by எஸ். எம். கணபதி, Jun 12, 2020, 14:40 PM IST

தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் 5ம் கட்ட ஊரடங்குக் காலம் முடிவடைய இன்னும் 2 வாரங்கள் இருக்கும் நிலையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. கொரோனா பரவல் அதிகம் ஆகி வருவதைத்தான் அரசாங்கம் வெளியிடும் அறிக்கைகளும், அவற்றில் உள்ள தரவுகளும் சந்தேகத்திற்கு இடமின்றிச் சுட்டிக்காட்டுகின்றன.


மே 8-ம் தேதியன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6009 பேர் என்றால், ஜூன் 8-ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரே மாதத்தில் மட்டும், சுமார் 27 ஆயிரம் பேருக்கும் கூடுதலாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கும் ஒரு வழி என்ற உண்மை நிலை அப்படியே இருக்க, ஊரடங்குதான் ஒரே வழி என்று தமிழக அரசு அடித்துச் சொல்லி வந்தது. ஆனால், ஊரடங்கு காலத்தில்தான், பாதிப்பு எண்ணிக்கை இத்தனை ஆயிரம் அதிகரித்துள்ளது என்றால் என்ன பொருள்? ஊரடங்கு என்பது முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை என்பதுதானே இதற்குப் பொருள்.

உலகத்திலேயே ஊரடங்கை, இத்தனை ஓட்டை உடைசல்களோடு, இவ்வளவு கேவலமாக, அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். முழு ஊரடங்கு - ஊரடங்கு - தளர்வு ஊடரங்கு - தளர்வில் மேலும் தளர்வு என்று ஊரடங்குச் சட்டத்தையே தரம் தாழ்த்தி, தொடர்ந்து கொச்சைப்படுத்தியது தமிழக அரசு. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கி இருந்தால், இப்படி கேலிக் கூத்தான ஊரடங்குத் தளர்வுகள் செய்திருக்க வேண்டாமே! அரசாங்கம் தனது கடமையைச் செய்யத் தவறியதால், தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததால், ஏற்படுத்தப்பட்ட ஊரடங்குத் தளர்வுகள்தான், இன்றைக்கு கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்க வேண்டிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.

தொடர்ந்து துரத்திவரும் இந்த ஆபத்தை, தமிழக முதல்வர் துளியேனும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இறப்பு விகிதம் குறைவு என்று, திரும்பத் திரும்பச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, தமிழக மக்களையும் ஏமாற்ற நினைக்கிறார். இந்தியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 8102 பேர் என்றால், தமிழகத்தில் பலியானவர் எண்ணிக்கை 349 பேர். இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5வது இடத்தில் இருக்கிறது. இதில் சென்னை என்ற ஒரு நகரத்தில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 279 பேர். இது பெரிய எண்ணிக்கை இல்லையா?
சென்னையில் ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் மட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 52 பேர். இது ஜம்மு காஷ்மீர், அரியானா, பீகார் மாநிலங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் பலியானவர்கள் 37 பேர்; இது கேரளாவை விட அதிகம். ஒரு மாநிலத்துக்கு இணையாக, சென்னை நகரத்தின் ஒரு மண்டலத்தில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை இருக்கிறது என்றால், இறப்பு விகிதத்தைச் சொல்லி, தனது நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சி செய்யும் முதல்வருக்கு, மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா?

சென்னையில் 400-க்கும் மேற்பட்ட மரணங்கள் மறைக்கப்பட்டதாகவும் அதனைச் சிறப்புக் குழு அதிகாரிகள் 11 பேர் ஆய்வு செய்யப் போவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் நடந்துள்ள 10 மரணங்கள் மறைக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். மரணங்கள் குறித்து, சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்கப்படவில்லையா? அல்லது அந்தத் துறை மேலிடத்து அறிவுரை கேட்டு மறைத்துவிட்டதா? என்ற சந்தேகம் பரவலாக மக்களிடையே எழுந்துள்ளது.
சுகாதாரத் துறை சொல்லும் கணக்கும், சென்னை மாநகராட்சி சொல்லும் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது; இரண்டுமே அரசின் துறைகள் தானே? தனியார் மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை தருவதால் உயிரிழப்புகள் குறித்துக் கணக்கிடுவது பெரிய வேலையாக இருக்கிறது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் பதில் அளித்துள்ளார். அப்படி என்றால், அரசுத் துறைகளுக்கிடையேயும், சிறப்புக் குழுக்களிடையேயும், தேவையான ஒருங்கிணைப்பு இல்லை என்றுதானே பொருள்?
இதில் அமைச்சர்களின் கண்காணிப்பு வேறு. அவர்கள் எதைக் கண்காணித்தார்கள், என்ன கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வெளியே போகும்போது கேமராக்களுடன் போகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது!

தினந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தும் முதலமைச்சருக்கு, இந்த விவரங்கள் தெரியாமல் அல்லது தெரிவிக்கப்படாமல் போனது எப்படி? இந்தச் செய்திகள் அனைத்தையும் மறைக்க, ஒரு சிறப்புக் குழு போட்டு விசாரிப்பதாக ஓரங்க நாடகம் ஒன்றை நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால், கொரோனா மரணங்கள் பாதிக்கும் மேல் மறைக்கப்பட்டிருக்கலாம் என நடுநிலையாளர்கள் கூடக் கருதுகிறார்கள்.
சென்னையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மகப்பேறுக்குத் தயாராகி வரும் தாய்மார்கள் 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காவல்துறை நண்பர்கள் ஏராளமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்துத் தரப்பிலும் பாதிப்புகள் அனுதினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

சென்னையின் ஆறு மண்டலங்களே கொரோனா மண்டியிருக்கும் மண்டலம் என்று சொல்லத்தக்க வகையில் மாறி அதிர வைக்கின்றன. இதனைத் தடுக்க அறிவியல் ரீதியான வழி தெரியாமல், மாநகராட்சி ஆணையர், அவருக்கு உதவ காவல்துறை அதிகாரிகள், அவருக்கு மேலே சிறப்பு அதிகாரி, அவருக்கும் மேலே இன்னொரு சிறப்பு அதிகாரி, அதற்கும் மேலே ஆளுங்கட்சியின் குழு அரசியலுக்காக ஐந்து அமைச்சர்கள் - என்று படிப்படியாக, விளம்பரத்திற்காக, கூடு மேல் கூடு கட்டிக் கோமாளிக் கோட்டை கட்டிக் கொண்டு இருந்தார்களே தவிர; கொரோனாவைத் தடுத்ததாகத் தெரியவில்லை. கட்டிய கோட்டை, வெறுங்காகிதக் கோட்டை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு விட்டார்கள்.முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளர் என்ற அதிகார சக்கரத்தில் சென்னை மாநகரமே சிக்கி அழுந்திச் சீரழிந்து கொண்டிருக்கிறது. யாரையும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவ அதிகார மையச் சண்டையில், அப்பாவித் தமிழக மக்கள், சூதுவாது ஏதுமறியாதோர் உயிர்ப்பலியாகிச் சுருண்டு கொண்டு இருக்கிறார்கள். இதில் கொரோனா காலத்துக் கொள்ளைகளும் குறையேதும் இல்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றன.

நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. 30 ஆயிரத்தைக் கடந்திருக்கும் தொற்று, 2 இலட்சம் ஆகலாம் என்று அரசே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தருகிறது என்றால், அதனைத் தடுக்க இந்த அரசாங்கம் மருத்துவ ரீதியாக என்ன செய்யப் போகிறது?
'சென்னையின் ஐந்து மண்டலத்தை மற்ற பகுதிகளிலிருந்து பிரித்து, அரண் போல் அமைத்து, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, மக்களைக் காப்பாற்றுங்கள்' என்று இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிக்கை வெளியிட்டேன். அது அரசினரின் செவி ஏறவில்லை. அப்படிச் செய்யும் போது அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, அவர்களுக்கு உதவ வேண்டும்.

அனைத்துத் தேவைகளையும் வழங்கி, மக்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். தங்களது தேவையைக் கவனித்துச் செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்துங்கள். மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு தவறுமானால், மக்கள் தங்கள் தேவைக்காக வெளியில் வர வேண்டிய அவசியத்தை அரசாங்கமே உருவாக்குவதாக ஆகிவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

தலைநகர் சென்னை என்பது மிகமிக மோசமான பேராபத்தைச் சந்தித்துக் கொண்டுள்ளது .இது எங்கே கொண்டு போய் விடுமோ என்ற கவலை ஏற்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. எப்போது, எப்படிக் காப்பாற்றப்படும் என்பதே சென்னையைப் பொருத்தவரையில் எண்ணிக் கணிக்க முடியாததாக உள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பது மட்டுமே அரசாங்கத்தின் கடமை அல்ல; அடுத்தடுத்துத் தேவையான மருத்துவக் கட்டமைப்பைத் திட்டமிட்டு, கொரோனாவைத் தடுப்பதே அரசாங்கத்தின் கடமை என்பதை உணருங்கள்!

டெண்டர்களை இறுதி செய்வதிலும், தமக்கு அவசியம் எனக் கருதும் கோப்புகளை நகர்த்துவதிலும், மத்திய பா.ஜ.க. அரசை மகிழ்விப்பதிலும் செலவிடும் நேரத்தின் ஒரு சிறு பகுதியையாவது, கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்குச் செலவிடக் கருணையுடன் முன்வாருங்கள்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading பீகார், அரியானாவை விட ராயபுரத்தில் கொரோனா சாவு அதிகம்.. ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை