கொரோனா பரவல் மற்றும் தடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 5 கேள்விகளை மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது இல்லத்திலிருந்தபடி, வீடியோ கான்பரன்சில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனாவால் 2 மாதங்களாக மக்கள் மிகவும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக அரசு வெளியிடும் தகவல்களில் குளறுபடிகள் அதிகமாக உள்ளது. அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதை ஆதாரப்பூர்வமாகச் சொல்லலாம். கொரோனா இறப்பு விவரங்களைத் தமிழக அரசு மறைக்காமல் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கையில் 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது ஏன்? அரசு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி போட்டியால் நிர்வாகத் திறமையின்மை வெளிப்படுகிறது. அமைச்சர்கள் இடையிலும் சண்டை நடக்கிறது, கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், நான் அரசுக்கு 5 முக்கிய கேள்விகளை எழுப்புகிறேன்.
1. தமிழகத்தில் கொரோனா பரவல் செங்குத்தாக அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?
2. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்குத் தனியாக ஒரு செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?
3. கொரோனா தொடர்பான குழுவினரின் அறிக்கைகளைப் பொதுவெளியில் வெளியிடாமல் பிரச்சனைகளைத் தீர்வு காணப்படுவதாக மக்களை ஏமாற்ற அரசு எப்போதிருந்து திட்டமிட்டுள்ளது?
4. எதிர்க்கட்சிகள், வல்லுநர்கள் மற்றும் விவரமறிந்த நிபுணர்களுடன் ஒத்துழைக்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருவது ஏன்?
5. நிதிநிலை அறிக்கை, மறு ஒதுக்கீடு, பொருளாதாரத்தைப் புதுப்பித்தல் அல்லது கொரோனா ஏற்படுத்திய இழப்புகளைச் சரி செய்யும் அணுகுமுறையை அரசு எப்போது எடுக்கும்?
இவ்வாறு ஸ்டாலின் கேட்டுள்ளார்.