சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு..

12 days Full lockdown in chennai Area from 19th june.

by எஸ். எம். கணபதி, Jun 16, 2020, 09:56 AM IST

வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே இம்மாதம் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனை மற்றும் அமைச்சரவை கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

முழு ஊரடங்கின் போது சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. அவை வருமாறு:மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு அனுமதி. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், நீதிமன்றங்கள் வழக்கம் போல் செயல்படலாம்.
அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மாநில அரசுத் துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.மத்திய அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29 மற்றும் 30ம் தேதிகளில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன்கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் நேரடியாக வழங்கப்படும்.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மக்கள் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே பொருட்களை வாங்க வேண்டும்.உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடைகள் நடத்த அனுமதியில்லை. அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு கட்டுமானப் பணி மேற்கொள்ளலாம்.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காகப் பிற மாவட்டங்களுக்குச் செல்ல தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.வெளிமாநிலத்திலிருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும் அதேபோல வெளிநாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

வரும் 21,28-ம் தேதிகளில் தளர்வு இல்லாமல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த நாட்களில், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும்.கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்த பகுதிகளில் கிருமி நாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.முழு ஊரடங்கின் போது 104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரக்கால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்து கால மருத்துவ உதவி ஆகியவை சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

அரசின் இந்த முயற்சிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலைத் தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளி விடுவதும், கிருமிநாசினி பயன்படுத்துவதும் கட்டாயமாகும்.இவ்வாறு முதல்வர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை