சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்த நிலையில், திடீரென குறைவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, கொரோனா பாதிப்பில் 50 சதவீதம் பேர் மும்பை, சென்னை, டெல்லி, அகமதாபாத், தானே போன்ற 5 நகரங்களில்தான் உள்ளனர்.
இதில், மும்பையில் தினமும் 6 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதிதாக 3500 பேர் வரைக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அது கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து நேற்றைய பாதிப்பு 1389 ஆனது. அதே போல், டெல்லியில் இது வரை 3 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டதில், 44 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தினமும் 2 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா சோதனை செய்யப்படுகிறது. மொத்தத்தில் 2 லட்சம் பேருக்குத்தான் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் தினமும் 1400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வந்தது. திடீரென நேற்று முன் தினம் அது ஆயிரத்துக்குக் கீழே சென்றது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்த மருத்துவ நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர் பிரதிபா கவுர் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதை மேற்கோள் காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு ட்விட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருந்ததாவது: கொரோனா பரிசோதனை, தொற்றின் தினசரி விவரம் இல்லாத நிலையில் தொற்று வளைவில் (EpiCurve) அசாதாரணமாக, திடீரென எண்ணிக்கை குறைவது புரியவில்லை என மருத்துவரும், நிபுணருமான பிரதீப் கவுர் கூறியிருப்பது உற்றுக் கவனிக்கத்தக்கது. அரசு உரிய விளக்கம் அளித்து, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.