சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை பின்பற்ற முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..

Stalin ask C.M. to follow supreme court rules in corona crisis.

by எஸ். எம். கணபதி, Jun 23, 2020, 10:10 AM IST

கொரோனா பரவாமல் தடுக்க சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அதிமுக அரசு பின்பற்ற வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :கொரோனா கொடிய நோய்த் தொற்றைத் தடுப்பதில் படுதோல்வியடைந்து, கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜூன் 19ம் தேதி சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழக மக்களை கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்திட முன்வர
வேண்டும்.


நாடு முழுவதும் கொரோனா நோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நோய்க் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திட மாநிலங்களுக்கு மிக முக்கியமான கட்டளைகளை சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.இந்த வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அ.தி.மு.க. அரசின் பிடியில் சிக்கி, தினமும் பதற்றத்திலும், அச்சத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய தீர்ப்பு அது. அந்த தீர்ப்பில் உள்ள கட்டளைகளில் மிக முக்கியமானவைகளை குறிப்பிடுகிறேன்.

கொரோனா சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளை ஆய்வு செய்யவும், மேற்பார்வையிடவும், வழிகாட்டவும் “மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள்“ அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும். அக்குழு 7 நாட்களுக்குள் மேற்பார்வைப் பணியினைத் தொடங்கிடத் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் சி.சி.டி.வி. கேமிராக்களைப் பொருத்த வேண்டும். சிகிச்சைக் குறைபாடுகளை நீக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு, அந்த சி.சி.டி.வி காட்சிகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் அளித்திட வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோரின் குடும்பத்தில் இருந்து விருப்பம் தெரிவிக்கும் ஓர் உறுப்பினர் அந்த மருத்துவமனையில், தனியாக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்று சிகிச்சையில் இருப்பவரின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து நேரடியாகத் தெரிந்து கொள்ளவும், தொலைப்பேசி வாயிலாக அறிந்து கொள்ளவும் ஒரு “ஹெல்ப் டெஸ்க்“ ஒவ்வொரு கொரோனா மருத்துவமனையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவரின் உறவினருக்கும், மருத்துவமனைக்கும் பரிசோதனை அறிக்கை கண்டிப்பாக வழங்கிட வேண்டும்.
மேலும், கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை மாநிலங்கள் செங்குத்தாக மேலும் மேலும் உயர்த்தி அதிகரித்திட வேண்டும் எனவும்; பரிசோதனை செய்ய வருவோரைத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட், அதைக் கண்டிப்பாக மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யாமல், இந்த நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தானாகவும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு மனப்பக்குவம் இல்லை. அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை பெறவும் அவருக்கு ஜனநாயக ரீதியான எண்ணம் இல்லை. எந்தப் பக்கம் இருந்து ஆலோசனைகள் வந்தாலும் அவற்றை அரசியல் என்று மிகச் சாதாரணமாக அலட்சியப்படுத்திவரும் முதலமைச்சர், இப்போது சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள கட்டளைகளையாவது, ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழக மக்களைக் காப்பாற்ற, அவற்றை முறையாக அணுகி, உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை பின்பற்ற முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை