நெல்லையில் அல்வா விற்கும் பிரபல இருட்டுக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அல்வா என்றால் நாடு முழுவதும் பிரபலமானது. அதிலும், நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே உள்ள இருட்டுக்கடை அல்வா மிகவும் பிரபலம். திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்கள் இந்த கடை அல்வாவுக்கு அடிமையாக இருப்பார்கள். இந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங்.
இவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நோயால் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே, ஹரிசிங்கின் மருமகனுக்கும் கொரோனா தொற்று உள்ளதாகவும், அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஹரிசிங்கின் பூர்வீகம், ராஜஸ்தான் மாநிலமாகும். சுதந்திரத்திற்கு முன்பே அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிஜிலிசிங், நெல்லைக்கு வந்து நெல்லையப்பர் கோயில் எதிரே அல்வா கடை போட்டிருக்கிறார். டியூப் லைட்டுகள் வந்த பின்பும், குண்டு பல்பு வெளிச்சத்தில் கடையை அவர் நடத்தி வந்ததால், இருட்டுக்கடை என்று பெயர் பெற்றது. இன்றளவும் அந்த கடையில் ஏராளமான வாடிக்கையாளர்களைப் பார்க்கலாம். ஹரிசிங் மரணம் அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.