இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்துகிற ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஒரு தவறான, பொய்யான அறிக்கையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்துகிற ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
ஒன்றிணைவோம் வா என்று திமுகவினர் நிவாரண உதவி கொடுத்தார்கள். அது கூட சரியாகக் கொடுக்கவில்லை. ஆனால், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் நிவாரணங்களை வழங்கினார்கள். அதனால் தான், அன்பழகன் என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரையே இழந்துள்ளோம்.
மருத்துவ நிபுணர்கள் குழு சொன்ன கருத்தை அவர்கள் கேட்டிருந்தால் சட்டமன்ற உறுப்பினரை இழந்திருக்க மாட்டோம். ஊரடங்கினால் நான் 90 நாட்களை வீணாக்கி விட்டதாக ஒரு தவறான செய்தியை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க. அரசு 90 நாட்கள் கடுமையாகப் பணியாற்றி இருக்கிறது. அதனால்தான் இன்றைக்கு கொரோனா தொற்று பரவுவது குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவல் ஆகவில்லை. சமூகப் பரவல் என்பதே கிடையாது. ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டால் அவரிடமிருந்து யார் யாருக்குச் சென்றிருக்கிறது என்று தெரியவருகிறது. எனவே, சமூகப் பரவலே கிடையாது.
சாத்தான்குளத்தில் செல்போன் வியாபாரி பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் கைது செய்யப்பட்டவுடன் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் மருத்துவமனையில் இறந்திருக்கிறார்கள். கோவில்பட்டி மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்துள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட், அந்த கோர்ட்டில் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்வார். ஐகோர்ட் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அந்த உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.