சாத்தான்குளம் லாக்அப் மரணம் தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணையைப் பாராட்டிய நீதிபதிகள், தங்கள் தீர்ப்பைத் தள்ளி வைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, இரவு முழுக்க கொடூரமாகத் தாக்கியதால்தான் இருவரும் இறந்தனர் என்று குற்றம்சாட்டி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவலர்கள் முதல் எஸ்.பி. வரை அனைவரும் பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, மதுரை ஐகோர்ட் கிளை தாமாக வழக்கு எடுத்து, விசாரித்து வருகிறது. ஐகோர்ட் உத்தரவின்படி சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். இதன்பின், மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. லாக்அப் மரணம் தொடர்பான வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசாரை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிபதிகள், எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் கேஸ் டைரி உள்ளிட்ட முக்கிய தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். மேலும், வழக்கில் 5 பேரை உடனடியாக கைது செய்ததற்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாயம் முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தாக்குவது மனித இயல்புக்கு மாறானது. 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் மக்களிடம் நம்பிக்கையைத் தமிழக காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து, சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் தொலைப்பேசி மூலம் பேசினர். ரேவதிக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், பெண் காவலரின் பாதுகாப்புக்கு உறுதி அளித்தனர். இதன்பின், ஐகோர்ட் தாமாக எடுத்த இந்த வழக்கில் தங்களின் உத்தரவை ஒத்தி வைத்தனர்.