சென்னையில் ஊரடங்கு தளர்வு.. ஆட்டோ, டாக்ஸி இயக்கம்.. ஜவுளி, நகைக் கடைகள் திறப்பு

Chennai to open partially today after intense lockdown

by எஸ். எம். கணபதி, Jul 6, 2020, 09:58 AM IST

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 6-வது கட்டமாக வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்னும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இன்று முதல் அமலாகியுள்ளன. இது தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது:
ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 80 பேர்) செயல்படலாம். அவர்களுக்கு அந்த நிறுவனங்களே வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களும் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம்.

ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகள் தவிர, தனியாக உள்ள அனைத்து வகை ஷோரூம்கள், ஜவுளி மற்றும் நகைக் கடைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.ஓட்டல்கள் உள்பட அனைத்து வகை உணவகங்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை உணவுகளை பார்சல் வழங்கலாம். வீடுகளுக்கு பார்சல் கொண்டு கொடுக்கும் சேவையை இரவு 9 மணி வரை மேற்கொள்ளலாம். காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். டாக்சிகளில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது.

இதே போல், முடி திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் போன்றவை ஏ.சி. போடாமல் இயங்கலாம். மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்கலாம்.அதே சமயம், சென்னையில் கோயில்கள் திறக்கப்படாது. மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் திறக்கப்படலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று காலை முதல் டீக்கடைகள், மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில்கள் ஓடவில்லை. மற்றபடி ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்டவை இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், தனியார் நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.

You'r reading சென்னையில் ஊரடங்கு தளர்வு.. ஆட்டோ, டாக்ஸி இயக்கம்.. ஜவுளி, நகைக் கடைகள் திறப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை