தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை.. முதலமைச்சர் பேட்டி.

No community transmission of corona in tamilnadu, says Edappadi palanisamy.

by எஸ். எம். கணபதி, Jul 8, 2020, 10:57 AM IST

தமிழகத்தில் இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் சிகிச்சை மையம் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்துப் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:கொரோனா நோயாளிகளுக்கு காலதாமதம் இல்லாமல் உடனடி சிகிச்சை அளிப்பதற்காக இந்த கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 22595 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 9073 என மொத்தம் 31,668 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சிக்குள் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 7,815, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 5,749 மொத்தம் 13,564 படுக்கைகள் உள்ளன.சென்னையைப் பொறுத்தவரை ஊரடங்கின் காரணமாக படிப்படியாக கொரோனா தொற்றுநோய் குறைகிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைத்திருக்கிறது. அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை மக்கள் எந்த அளவிற்குப் பின்பற்றுகிறார்களோ, அந்த அளவுக்கு இந்த நோய்ப் பரவலைக் குறைக்க முடியும்.

கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்று நான் பல முறை தெரிவித்து விட்டேன். நாம் இப்படிக் கூடியிருக்கும் இடத்தில் நோய் பரவினால்தான் சமூகப் பரவலாகும்.
ஒரு பக்கம் நோய்ப்பரவலை தடுக்க வேண்டும். இன்னொருபுறம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. சுமார் 105 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதையே தொடர்ந்து மேற்கொண்டால், வாழ்வாதாரத்தில் பாதிப்பு மற்றும் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு விடும். முடிந்த அளவிற்கு ஊரடங்கின் மூலமாக நோய் பரவலைத் தடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நிலையில்தான் அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

இந்த ஊரடங்கின் மூலமாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஊரடங்கு காலத்தில் முழு ஒத்துழைப்பு நல்கியதற்கு மனமார, உளமார பாராட்டுக்கள். இனிமேல் ஊரடங்கு நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். இது முழுக்க முழுக்க மக்களுடைய கையில் தான் இருக்கிறது. மக்கள் அரசினுடைய வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தால், இந்தப் பரவல் நிச்சயமாகக் குறையும். மக்கள் விழிப்போடு இருந்தால், அரசின் வழிமுறைகளைப் பின்பற்றினால் இந்த நோய்ப் பரவல் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

You'r reading தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை.. முதலமைச்சர் பேட்டி. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை