சென்னையில் கொரோனா பரவும் வேகம் சற்று குறைந்திருந்தாலும், மதுரை உள்பட சில மாவட்டங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இது வரை இந்நோயால் 1765 பேர் வரை பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வந்தது. 2, 3 நாட்களாக இது சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், நேற்று புதிதாக 4231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 145 பேரும் அடங்குவார்கள்.
நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 26,581 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3994 பேரையும் சேர்த்தால், இது வரை 78161 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 65 பேரையும் சேர்த்தால் 1765 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இது வரை தமிழகத்தில் 14 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 41038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு வெளியிடவில்லை.
சென்னையில் நேற்று 1216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது வரை சென்னையில் மொத்தம் 73,128 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 169 பேருக்கும், திருவள்ளூரில் 3369 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் நோய்ப் பாதிப்பு 5 ஆயிரத்தை ஏற்கனவே தாண்டி விட்டது. இந்நிலையில் மதுரையில் நேற்று நோய்ப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 261 பேரையும் சேர்த்து மொத்தம் 5299 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.
இந்த மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தலா ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.