தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை என்றும் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்றும் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படம் 'நோட்டா'. அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.
ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ரஞ்சித் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில், தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் சார்ந்து சிந்தித்து செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய இளைஞர்கள் தான் எந்த வித அரசியலில் சார்ந்து இருக்கிறோம்; எந்த வித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது. ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்குப்பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது.
அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் நோட்டா என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.