தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை ஒரு லட்சத்து 38,470 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 1966 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, சென்னையில் கொரோனா பரவும் வேகம் குறைந்திருந்தது. ஆனால், நேற்று மீண்டும் புதிதாகப் பாதித்தவர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழகம் முழுவதும் நேற்று 4244 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில் 34 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 38,470 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3617 பேரையும் சேர்த்தால், இது வரை 89,532 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 68 பேரையும் சேர்த்தால் 1966 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இது வரை தமிழகத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
சென்னையில் நேற்று 1168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் தற்போது வரை மொத்தம் 77,338 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 245 பேருக்கும், திருவள்ளூரில் 232 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் நோய்ப் பாதிப்பு 6500ஐ தாண்டி விட்டது. இந்நிலையில் மதுரையில் நேற்று நோய்ப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 319 பேரையும் சேர்த்து மொத்தம் 6078 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. காஞ்சிபுரத்தில் 385, கோவையில் 117, கள்ளக்குறிச்சியில் 65, கன்னியாகுமரியில் 104 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.சேலம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை. தேனி, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் அதிகமானோருக்கு நோய் பரவியிருக்கிறது.