ஊரடங்கு காலத்தில் ஆவின் விலைகளை உயர்த்துவதா.. முகவர்கள் சங்கம் கண்டனம்..

Aavin increase milk price indirectly says Milk agents association.

by எஸ். எம். கணபதி, Jul 14, 2020, 14:33 PM IST

ஊரடங்கால் மக்கள் கஷ்டப்படும் சூழலில், ஆவின் நெய், வெண்ணெய் விலைகளை உயர்த்தியதற்குப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று(ஜூலை14) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:கடந்த வாரம், ஆவின் நிறுவனம் சார்பில் 5 வகையான பால் பொருட்களை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். அவற்றில் மோர், லஸ்ஸி மற்றும் 90 நாட்கள் கெட்டுப் போகாத பால் ஏற்கனவே சந்தையில் விற்பனையில் உள்ளதென்றும், அதனைச் சிறு மாற்றங்களோடு புதிய பொருட்களாகச் சித்தரிக்கப்படுவதாகவும் எங்கள் சங்கம் சார்பில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் (கொழுப்புச் சத்து 6.0% திடசத்து 9.0%) விற்பனையில் இருக்கும் போது, தற்போது அதில் வெறும் 0.5%கொழுப்புச் சத்தை கூடுதலாக்கி, பாக்கெட் வண்ணத்தை மாற்றி அதற்கு "டீமேட் பால்" எனப் பெயரிட்டு 1 லிட்டருக்கு 9 ரூபாய் கூடுதலாக விலை வைத்து 60 ரூபாய் என நிர்ணயம் செய்திருப்பதைக் கண்டித்திருந்தோம். ஆவின் நிறுவனம், இன்று (ஜூலை14) முதல் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 20ரூபாய் முதல் 50ரூபாய் வரையிலும், சமையல் வெண்ணெய் விற்பனை விலை ஒரு கிலோ 20ரூபாய் முதல் 30ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதிலும் நேற்று (ஜூலை13) அதற்கான சுற்றறிக்கை வழங்கி விட்டு இன்று முதல் உடனடியாக அதன் விலை உயர்வை நடைமுறைப்படுத்துவது தனியார் பால் நிறுவனங்களை விடச் சர்வாதிகாரி போல் ஆவின் நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. இதனைத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.ஏனெனில் கொரோனா பேரிடர் காலமான தற்போது நான்கு மாதங்களாக அமலில் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு, வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு முடிவெடுக்கச் சர்வாதிகார எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே சாத்தியப்படும்.உயர்த்தப்பட்ட நெய் மற்றும் சமையல் வெண்ணெய், டீ மேட் பால் போன்றவற்றின் விற்பனை விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பொன்னுசாமி கூறினார்.

You'r reading ஊரடங்கு காலத்தில் ஆவின் விலைகளை உயர்த்துவதா.. முகவர்கள் சங்கம் கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை