தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று பரவும் வேகம் குறைந்தாலும், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை14) 4526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 59 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 47,324 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4743 பேரையும் சேர்த்தால், இது வரை 97,314 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 67 பேரையும் சேர்த்தால் 2099 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 47,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இது வரை தமிழகத்தில் 16 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 39,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
சென்னையில் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினமும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. பின்னர், இது படிப்படியாகக் குறைந்து வந்தது. நேற்று 1078 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 79,662 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 264 பேருக்கும், காஞ்சிபுரம் 117, மதுரை 450, திருவள்ளூர் 360, கோவை 188, திண்டுக்கல் 153, கன்னியாகுமரி 122, சிவகங்கை 111, தென்காசி 102, தூத்துக்குடி 112, திருச்சி 116, வேலூர் 124, விழுப்புரம் 120, விருதுநகர் 328 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
மதுரையில் நேற்று நோய்ப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 450 பேரையும் சேர்த்து மொத்தம் 6990 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தினமும் 400 பேருக்குக் குறையாமல் நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்ற தகவல் தெரியவில்லை. தினமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டால், அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்படலாம் எனத் தெரிகிறது.