தமிழகத்தில் கொரோனா நோய்க்கு நேற்று ஒரே நாளில் 69 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 2236 ஆக அதிகரித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. இந்தியாவில் நோய்ப் பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை16) 4549 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 66 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 56,369 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5106 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 7416 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 69 பேரையும் சேர்த்தால் 2236 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இது வரை தமிழகத்தில் 17 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 45,888 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
சென்னையில் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. நேற்று 1159 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 82,128 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 179 பேருக்கும், காஞ்சிபுரம் 67, மதுரை 267, திருவள்ளூர் 526 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 7597 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரிலும் பாதிப்பு எண்ணிக்கை 8107 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.