எடப்பாடி காட்டம் ஏன்? பாஜகவை விட்டு விலகுகிறதா அதிமுக?

Advertisement

பாஜக என்ன செய்தாலும் தலையாட்டி வந்த அதிமுக அரசு திடீரென காட்டமாக மாறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிகள் மாறுமோ என்ற சந்தேகக் கணைகளையும் எழுப்பியிருக்கிறது.மத்தியில் 2வது முறையாக அதிகப் பெரும்பான்மையுடன் மோடி அரசு பொறுப்பேற்றவுடன், மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி அரசுகளை மிரட்டி தன் வழிக்குக் கொண்டு வர முயற்சித்தது. மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு, மகாராஷ்டிர உத்தவ் அரசு, ராஜஸ்தான் கெலாட் அரசு போன்றவை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்கின்றன. ஆனால், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இது வரை அடங்கியே சென்றது. பல்வேறு பிரச்சனைகளிலும் மத்திய அரசின் முடிவே செயலுக்கு வந்தது.

மேலும், பாஜக மற்றும் இந்துத்துவா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதேச்சதிகாரமாகவும் தரமற்ற விமர்சனங்களையும் பொது வெளியில் வைக்கின்றனர். அதற்கும் எடப்பாடி அரசு பெரிய அளவில் எதிர்வினை ஆற்றவில்லை. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், மீடியாவில் உள்ள பெண்களைத் தரக்குறைவாக விமர்சித்து காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், கருத்து பதிவிட்டார். அதற்கு ஜெயலலிதா காலத்து அதிமுகவைப் போல் எதிர்வினை ஆற்றவில்லை. அதே எஸ்.வி.சேகர் தனது வீட்டில் ஆவின் பால் பாக்கெட்கள் கெட்டுப் போய் விட்டதாக ட்விட் போட்டதும் ஆவின் அதிகாரிகளே அவரது வீடு தேடிச் சென்று 8 பாக்கெட் பால் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு யாரோ விஷமிகள் காவி உடை அணிவித்து களங்கம் செய்திருக்கிறார்கள். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது:உலகத் தமிழர்களால் போற்றி வணங்கப்படுகிற எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீப காலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்குத் தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிச்செயல்கள் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களைப் பிறர் ஏற்கப் பாடுபடுவது மட்டுமல்ல, மாற்றுக் கருத்துகளையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களைக் காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும். மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது.எம்.ஜி.ஆர். சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தி இருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களைத் தோலுரித்துக் காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே போல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட் போட்டிருக்கிறார்.

முதல்வரின் அறிக்கையில், நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது என்று கூறியிருப்பது, பாஜகவைத்தான் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்து மதம், காவி, பெரும்பான்மை உரிமை என்றெல்லாம் சொல்லி, அரசியல் செய்வது பாஜக மட்டும்தான் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எனவே, ஓட்டு அரசியல் பிழைப்பு என்றும், தமிழினம் ஏற்காது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பாஜகவையே நேரடியாகக் குறிக்கும் என்றும் பேசுகிறார்கள்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்கு பாஜகவே காரணம் என்று அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கூறியுள்ளனர். எனவே, சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவிடம் இருந்து விலகி நிற்க அதிமுக முயற்சிக்கிறதா என்ற பேச்சு ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு, அடுத்தது பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று பாஜக தலைவர் முருகன் கூறியிருக்கிறார். மற்ற பாஜக தலைவர்களும் அதிமுகவை விமர்சித்து வருகிறார்கள்.எனவே, அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகுமா, அல்லது விலக்கப்படுமா அல்லது இப்போது நடப்பதெல்லாம் பொய்ச்சண்டையா என்பது அடுத்தடுத்த நிகழ்வுகளில் தெரிய வரலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>