தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருப்பதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில், நேற்று ஏற்பட்ட தீயில் சுற்றுலா சென்ற பலர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பூரில் இருந்து 12 பேரும், சென்னையில் இருந்து 24 பேரும் டிரெக்கிங் சென்றிருந்தவர்கள் இந்த காட்டுத் தீயில் சிக்கியதாக கூறினார்.
மீட்கப்பட்டவர்களுள் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீட்கப்பட்டவர்களுள் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிக்காப்டர் மூலம் நுரை கலந்த நீரைப் பாய்ச்சியடித்து, தீயைக் கட்டுப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.