`கட்சியில் கலகம் ஏற்படுத்தப் பார்க்கிறேனா?! -நாளிதழ் செய்தியால் கடுப்பான துரைமுருகன்

by Sasitharan, Aug 7, 2020, 12:24 PM IST

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுகவில் காலியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் பொருளாளராக இருந்தவரும் மூத்த தலைவருமான துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்ப, பொருளாளர் பதவியைக் கடந்த மார்ச்சில் ராஜினாமா செய்தார் துரைமுருகன். இதன்பின் பொதுக்குழுவில் முறைப்படி, துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என யூகிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கத்தால் பொதுக்குழு நடப்பதில் சிக்கல் ஏற்படவே, துரைமுருகன் தேர்வும் தள்ளிப்போனது.

இதற்கிடையே, இன்னொரு சர்ச்சையும் எழுந்தது. துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆவதற்கு ஸ்டாலினின் குடும்பத்துக்குள் எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறப்பட்டது. இதன் உண்மைத் தன்மை தெரிவதற்குள், பொதுச்செயலாளர் தேர்வைத் தள்ளிவைத்ததுடன், பொருளாளர் பதவியில் மீண்டும் துரைமுருகனே தொடருவார் என்று அறிவித்தார் ஸ்டாலின். இந்த சம்பவங்கள் நடந்து பல நாட்கள் ஆன நிலையில் சமீபத்தில் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க செல்வம் வெளியேறியதை போல, பொதுச்செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் துரைமுருகன் திமுக கட்சியில் தொடர்வது முக்கிய முடிவு எடுக்க உள்ளார் என்று நாளிதழ் ஒன்று தனது முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

திமுக கட்சி மற்றும் துரைமுருகன் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் துரைமுருகன். ``என் மீது ஒரு களங்கத்தைக் கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் , எம்.பி பதவிகள் கிடைக்கும் என்றும் இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்ல. அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து ஒரு போராளியாக, இந்த இயக்கத்துக்கு வந்தவன். நான், இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இருவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு கழகத்துக்காகக் கோஷமிடுவேன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்" என மறுப்பு தெரிவித்துள்ளார்.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை