செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகமாகும் கொரோனா.. மதுரையில் பாதிப்பு குறைகிறது..

covid19 cases decreases in madurai dists.

by எஸ். எம். கணபதி, Aug 15, 2020, 10:12 AM IST

தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. அதே சமயம், மதுரை மாவட்டத்தில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் தொடர்ந்து பரவி வருகிறது. இம்மாதத்துடன் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், பல மாவட்டங்களில் தினமும் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.14) 5890 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 28 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 26,245 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இதில், மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 5556 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 67,015 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 117 பேரையும் சேர்த்தால் 5514 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 53.716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இது வரை தமிழகத்தில் 33 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 68,301 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

சென்னையில் நேற்று 1187 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 14,260 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 437 பேருக்கும், திருவள்ளூர் 495, காஞ்சிபுரம் 315, தேனி 365, கோவை 385 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 20,080 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 18,958 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,409 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தேனி, சேலம், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம், மிகவேகமாக தொற்று பரவிய மதுரை மாவட்டத்தில் தற்போது புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தினமும் 300 பேர் வரை தொற்று பரவி வந்த நிலையில், அது படிப்படியாகக் குறைந்து நேற்று புதிதாக 46 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் இது வரை 12,561 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

You'r reading செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகமாகும் கொரோனா.. மதுரையில் பாதிப்பு குறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை