ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை.. வேதாந்தா மனு தள்ளுபடி.. ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Madras High Court refuses to allow the reopening of Sterlite copper smelting plant in Tamil Nadus Thoothukudi.

by எஸ். எம். கணபதி, Aug 18, 2020, 11:19 AM IST

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்புக் கூறியுள்ளது. ஆலையைத் திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால் அந்நகரில் வசிக்கும் மக்களுக்குப் பல நோய்கள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதனால், அந்த தொழிற்சாலையை மூட வேண்டுமென்று கோரி பெரும் போராட்டங்கள் நடந்தன. கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாகப் பலியாகினர். இதையடுத்து மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதே சமயம், அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மக்களுக்கு நோய்கள் பரவுவதாகவும், தொழிற்சாலையைத் திறக்கக் கூடாது என்றும் கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், டெல்லி சீனியர் வக்கீல் கே.வி.விஸ்வநாதன், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சீனியர் வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சீனியர் வக்கீல்கள் மாசிலாமணி, பி.எஸ்.ராமன், ஏ.எல்.சுந்தரேசன், அரியமா சுந்தரம், மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் வைகை, வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகோ உள்ளிட்டோர் வாதாடினர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துக் கடந்த ஜனவரி 8ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் வெளியிட்ட தீர்ப்பில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இதையடுத்து, வேதாந்தா நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

You'r reading ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை.. வேதாந்தா மனு தள்ளுபடி.. ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை