தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.18) 5709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 49,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இவர்களில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 5850 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 89,787 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 121 பேரையும் சேர்த்தால் 6007 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 53,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இது வரை தமிழகத்தில் 37 லட்சத்து 12,657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 65,075 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 1182 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 19,059 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 344 பேருக்கும், திருவள்ளூர் 489, காஞ்சிபுரம் 249 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 21,499 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 20,618 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14,296 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று அங்கு 77 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. அந்த மாவட்டத்தில் இது வரை 12,955 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம், சென்னையில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இது வரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இது வரை கட்டுப்படவில்லை. மேலும், கொரோனா நோயாளிகள் இறப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநிலம் முழுவதும் இறப்பு 6 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதில் சென்னையில் மட்டுமே 2501 பேர் பலியாகியுள்ளனர். அடுத்ததாக, செங்கல்பட்டு 356, கோவை201, திருவள்ளூர் 346, திருவண்ணாமலை 127, நெல்லை 130, தூத்துக்குடி 90, வேலூர் 129, விருதுநகர் 159 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.