விநாயகர் சிலைக்கு தடை.. அரசு நடவடிக்கை குறித்து ஐகோர்ட் நம்பிக்கை..

Government will take action if Ganesha idols installed.

by எஸ். எம். கணபதி, Aug 19, 2020, 12:42 PM IST

பொது இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்தாலோ, ஊர்வலம் நடத்தினாலோ, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகச் சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்போது, கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது விழாக்கள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதித்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்தது.

இதற்கு இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்துவோம் என்று சில அமைப்புகள் அறிவித்தன. இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.இந்நிலையில், அன்பழகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணியினர் அறிவித்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இன்று(ஆக.19) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இது போன்று தடையை மீறுவதாக மிரட்டல் விடுப்பவர்களிடம் இருந்து அரசைப் பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை. அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எதைத் தமிழக அரசு எடுக்கும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You'r reading விநாயகர் சிலைக்கு தடை.. அரசு நடவடிக்கை குறித்து ஐகோர்ட் நம்பிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை