அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கழகத்தின் ஈரோடு மண்டல மாநாட்டிற்கான இரண்டாவது அழைப்பு மடல்.
சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குத் தனது தங்கத் தமிழ் வரிகளால் கவிதைநடை உரை எழுதியிருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் புறநானூற்றுக் காட்சிகளை விவரித்திருப்பார். களத்தினில் குதிரைப் படைகள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளன. யானைப் படைகள் எந்தளவு வலிமை காட்டி வருகின்றன. தேர்ச் சக்கரங்களில் வீழ்ந்த எதிரிப் படைகளின் எண்ணிக்கை எவ்வளவு, வெற்றி முரசம் கொட்டிய சொந்த நாட்டு வீரர்கள் எப்போது திரும்பி வருவார்கள் எனப் பல நிலவரங்களும் அந்தப் பாடல்களின் வழியே தெரியவரும்.
அதுபோலத்தான், கொள்கைப் பட்டாளமாக ஈரோட்டில் குவிந்திடுவோம் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் விடுத்த முதல் அழைப்பு மடல் கண்டு, ஈரோடு மண்டல மாநாட்டுப் பணிகளின் ஒவ்வொரு அங்குல முன்னேற்றம் குறித்த செய்திகளும் உடனுக்குடன் வந்தவண்ணம் உள்ளன.
இருநாட்களும் நிறைந்துள்ள நிகழ்வுகளை நிறைவேற்றி முடித்திடுவது பெரும்பணி என்றபோதும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் நீங்கள் இருக்கும்போது அவற்றை எளிதில் நிறைவேற்றிடலாம் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. அதன் முன்னோட்டமாக, திராவிட இயக்க கண்காட்சி ஈரோடு மண்டல மாநாட்டு வளாகத்தில் முன்கூட்டியே திறக்கப்படுகிறது.
மேற்கு மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவர்களும் பெண்களும் கண்காட்சியைக் காணவும், மாநாட்டின் சிறப்பை அறியவும் இப்போதே ஆர்வம் காட்டும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான். எனினும், இருவண்ணக் கொடியை உணர்வில் கொண்ட தி.மு.கழகத்திற்கு மட்டுமே ஆட்சி அமைக்கும் வலிமை உள்ளது என்பதே தமிழ்நாட்டு மக்களின் மனதில் உள்ள எண்ணம்.
மக்கள் மனதை எதிரொலிக்கும் வகையில் ஈரோட்டில் நம் வலிமையைக் காட்டிட கழகத்தின் செயல்தலைவராக-கலைஞரின் பிள்ளையாக-உங்களில் ஒருவனாக அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாட்டின் பிணி நீக்கிட அணி திரள்வீர்" என்று குறிப்பிட்டுள்ளார்.