ஒரு ஆணாக இருந்தால் இப்படி கேட்டு இருப்பாரா? இப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்றுகூடத் தெரியாதவர்தான் அமைச்சராக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவில் பங்கேற்க வந்த உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல் ரீதியாக ஒரு பெண் நிருபர் கேள்வி கேட்டதற்கு நீங்க அழகாக இருக்குறீர்கள். உங்க கண்ணாடி பிரேம் அழகாக இருக்கிறது என்று மிக மோசமான முறையில் பேசி இருக்கிறார்.
பத்திரிக்கை நிருபர். அவர் ஒரு உழைக்கும் பெண். கேள்வி கேட்பது அவரது கடமை. பதில் இருந்தால் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அவரே சொன்னதைப் போல சீனியர்கள் சொல்வார்கள் என ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஒரு ஆணாக இருந்தால் இப்படி கேட்டு இருப்பாரா? இப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்றுகூடத் தெரியாதவர்தான் அமைச்சராக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடம் பெண் நிருபர் ஒருவர் 'இன்றைய கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் விஜய பாஸ்கர் நிருபரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், 'உங்கள் கண்ணாடி அழகாக இருக்கிறது' எனக் கூறினார்.
மேலும், அந்த பெண் நிருபர், 'அதை நான் தினமும்தான் அணிகிறேன். கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது' என மீண்டும் கேட்கிறார். அதற்கு சிரித்துக்கொண்டே 'ஆனால், இன்றைக்கு உங்களுக்குக் கண்ணாடி மிகவும் அழகாக இருக்கிறது' என்று மீண்டும் கூறியது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.