தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவான பேருக்குத்தான் தொற்று பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகச் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.14) 5752 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 8511 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிகளுக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கிறது என்கிற தகவலைத் துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மருத்துவ உபகரணம் மற்றும் மருந்துகள் வாங்க 830.60 கோடி ரூபாய், மருத்துவ கட்டுமான பணிக்காக 147.10 கோடி ரூபாய், கூடுதல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் உணவுக்காக 243.50 கோடி ரூபாய், கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக 638.85 கோடி ரூபாய், தனிமைப்படுத்துதலுக்காக 262.25 கோடி ரூபாய், வெளி மாநில தொழிலாளர்களுக்காக 143.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல், நியாயவிலை அட்டைத்தாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கியது மற்றும் நல வாரியங்களுக்காக நலத் திட்டங்களுக்காக 4,896.05 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. மொத்தம் கொரோனா தடுப்பு பணிக்காக 7,167.97 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று சட்டசபையில் கூறியிருக்கிறார்.