என் பின்னால் கடவுள் மற்றும் மக்களைத் தவிர வேறு யாரும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர், கடந்த 10ஆம் தேதி இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் புறப்பட்டார். அப்போது, இமயமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் சென்று ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசீ பெற்றார். இதனையடுத்து தனது ஆன்மிகப் பயணத்தை முடித்துக் கொண்டு ரஜினி இன்று சென்னை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், “எனது ஆன்மிகப் பயணம் நீண்ட நாள்களாகத் தடைப்பட்டு இருந்தது. தற்போது நான் அதை முடித்து வந்துள்ளேன். அது மனதுக்கு மிகவும் அமைதியாகவும் புத்துணர்ச்சியாகவும் உள்ளது. தமிழகம் மதச் சார்பற்ற நாடு. ரதயாத்திரையின் மூலம் மதக் கலவரம் வராமல் அரசு பாதுகாக்க வேண்டும். பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயல்” எனத் தெரிவித்தார்.
மேலும் ரஜினிகாந்திற்கு பின்னால் பாஜக உள்ளதாக பேசப்படுவது குறித்த கேள்விக்கு, “என் பின்னால் கடவுள் மற்றும் மக்களைத் தவிர வேறு யாரும் இல்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாமதமாகச் செயல்படுகிறது, இது தொடர்பாகத் தமிழக அரசு இன்னும் அழுத்தம் தர வேண்டும்” எனவும் தெரிவித்தார்.