இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்..

Hindu Munnani founder Rama Gopalan passes away.

by எஸ். எம். கணபதி, Oct 1, 2020, 09:43 AM IST

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஓய்வில் இருந்து வந்தார். கடந்த 27ம் தேதி திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று பாதிப்பு உறுதியானது. அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார்.

தமிழகத்தில் 1980ம் ஆண்டுகளில் தென்காசி அருகே தீண்டாமைக் கொடுமையால் தலித் மக்கள் சுமார் 200 பேர், இஸ்லாமிய மதத்திற்கு மாறினர். இதைத் தொடர்ந்து, இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறுபவர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்து முன்னணி அமைப்பை நிறுவியவர் ராமகோபாலன். 90களில் சென்னை திருவல்லிக்கேணியில் முதன் முதலில் விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தவர். அதற்கு முன்பு தமிழகத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தும் சம்பிரதாயம் இருந்ததில்லை. மும்பையில்தான் பெரிய ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வந்தன. ராமகோபாலன் மற்ற மதங்களுக்கு எதிராகச் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமகோபாலன் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில் கூறியுள்ளதாவது:இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் திரு. ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன். சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நல்ல நண்பர். பெரியவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Tamilnadu News

அதிகம் படித்தவை