Tuesday, Aug 3, 2021

ஜிஎஸ்டி கவுன்சிலில் இழப்பீடு குறித்து வாக்கெடுப்பு.. ஸ்டாலின் வலியுறுத்தல்..

Stalin demands voting on GST compensation in GST councill.

by எஸ். எம். கணபதி Oct 4, 2020, 10:46 AM IST

ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடுசெய்ய உருவாக்கப்பட்ட நிதியில் போதிய பணம் இல்லை என்பதால் - வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து, அக்.5ம் தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 42-வது கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. 101-வது அரசியல் சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு ஈடுசெய்தல்) சட்டம் 2017 ஆகியவற்றில்- ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும் என்று மாநிலங்களுக்கு அளித்த இறையாண்மை மிக்க உத்தரவாதத்தை மத்திய பா.ஜ.க. அரசு காற்றில் பறக்கவிட்டுள்ள செயல் மிகுந்த வேதனைக்குரியது.


வசூல் செய்யப்பட்ட ஈடுசெய்தல் நிதியை - சம்பந்தப்பட்ட ஜி.எஸ்.டி மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் நிதியில் வரவு வைக்காமல் - இந்தியத் தொகுப்பு நிதியில் வைத்துக் கொண்டு - 47,272 கோடி ரூபாயை வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தி விட்டது என்று சி.ஏ.ஜி. அமைப்பே பகிரங்கமாகக் குற்றம் சாட்டி விட்டது. இந்தியத் தலைமை வழக்கறிஞர் கூறியிருக்கிறார் என்று ஒரு காரணத்தை மேற்கோள் காட்டி, வருவாய் இழப்பீட்டினை ஈடுசெய்ய முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளது. மாநிலங்கள் வேண்டுமானால் சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது, மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையைப் பாதிக்கும்.
கடந்த 27.8.2020 அன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 41-வது கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியானபோது தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் அதை வலுவாக எதிர்த்து - வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும். ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்து நான்கு நாள் கழித்து 31-ஆம் தேதி பிரதமருக்கு 4 பக்கக் கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் பழனிசாமியும் “மாநிலங்களே கடன் வாங்கிக் கொள்வது நிர்வாக சிக்கல் கொண்டது. அது கடினம். ஆகவே அதுகுறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருக்கும் வாக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தி - ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டை ஈடுசெய்ய மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்களைத் திரட்டும் ஓர் அருமையான வாய்ப்பை அ.தி.மு.க. அரசு சென்ற கூட்டத்திலேயே கோட்டை விட்டுவிட்டது.உதாரணமாக, இதற்கு முன்பு நடைபெற்ற 38-ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் “லாட்டரிக்கு வரி விதிப்பது குறித்த பிரச்சினையில் - கேரள மாநில நிதியமைச்சர் இப்படியொரு வாக்கெடுப்பு உரிமை பற்றி கோரிக்கை வைத்து - அதை ஜி.எஸ்.டி. கவுன்சிலும் ஏற்றுக்கொண்டு முதல்முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அப்படியொரு வாக்கெடுப்பும் நடந்து முடிந்திருக்கிறது என்பதைக் கூட இக்கூட்டங்களில் பங்கேற்கும் அமைச்சர் திரு. ஜெயக்குமாரும் புரிந்து கொள்ளவில்லை; முதலமைச்சருக்கும் அதுகுறித்து எல்லாம் யோசிக்கவே நேரமில்லை.
இதுபோன்ற நிலையில்தான் இப்போது 42-ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அக்கூட்டத்தில் “ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடுசெய்ய மாநிலங்கள் சந்தையில் கடன் பெறுவது உள்ளிட்ட மத்திய அரசு வழங்கிய இரு வாய்ப்புகள் குறித்தும்” மற்றும் “இழப்பீட்டை ஈடுசெய்யும் நிதிக்கான வரி (Cess) வசூல் காலத்தை நீட்டிப்பது குறித்தும்” விவாதிக்க இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து - மாநிலங்களே சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பைப் பல்வேறு மாநிலங்களும் எதிர்க்கின்றன. கடந்த 31.8.2020 அன்று முதலமைச்சர் பழனிசாமி, ஜி.எஸ்.டி. குறித்து ஒரு நீண்ட கடிதத்தை வழக்கம் போல் பிரதமருக்கு எழுதி - மத்திய அரசே கடன் வாங்கியோ அல்லது இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) கொடுத்தோ ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டை மாநிலத்திற்கு ஈடுசெய்ய வேண்டும் என்று மட்டும்தான் கூறியிருக்கிறாரே தவிர - மத்திய அரசின் முடிவு மாநில நிதி உரிமைகளுக்கு எதிரானது என்றும் - அதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தியே முடிவு செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தவில்லை; அப்படி பிரதமரிடம் மாநில உரிமைக்காகக் கோரிக்கை வைக்கத் தைரியமும் இல்லை!


கடிதம் எழுதி விட்டால் ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு ஈடுசெய்து விடாது என்பதைத் பழனிசாமி உணர வேண்டும்.திமுக உறுப்பினர் வில்சன் மாநிலங்களவையில் இதுகுறித்துக் கேள்வி எழுப்பிய போது, “தமிழ்நாட்டிற்கு 11,269 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளது” என்று 20.9.2020 அன்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பதிலளித்திருக்கிறார். கொரோனா பேரிடரில் - தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய இழப்பீட்டுத் தொகையை - அரசியல் சட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையை - உரிமையுடன் கேட்டுப் பெறுவதில் இதுவரை முதலமைச்சர் பழனிசாமி தோல்வி கண்டு நிற்பது – தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது.ஆகவே இனியும் அமைதி காக்காமல் - அக்டோபர் 5-ஆம் தேதி நடக்கும் 42-ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி - மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading ஜிஎஸ்டி கவுன்சிலில் இழப்பீடு குறித்து வாக்கெடுப்பு.. ஸ்டாலின் வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

அண்மைய செய்திகள்