ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும், 18 வயது நிறைவடையாத சிறுவர்களும் வாகனம் ஓட்டினால் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒட்ட அதிகம் ஆர்வம் காட்டும் சிறுவர்கள், பொது இடங்களில் வேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏராளமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த வேகத்தால், அவர்களுக்கு மட்டுமின்றி எதிரில் வருபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால், 18 வயது நிறைவடையாதவர்கள் பொது இடங்களில் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் பயப்படாமல் உயிருக்கே ஆபத்து வரும் சூழ்நிலையை சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படுத்திவிடுகின்றனர்.
இதனால், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறை கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மோட்டார் வாகன சட்டப்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாதவரும், 18 வயது நிறைவடையா சிறாரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்ட கூடாது. ஒட்டுனர் உரிமம் இல்லாதவரையோ, 18 வயதுக்கு கீழ் உள்ளவரையோ வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றம். இந்த குற்றத்திற்காக ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். ஓட்டுனர் உரிமம் இல்லாதவரையும், சிறாரையும் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.