கல்லூரி கவுன்சிலிங்கிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்த தனக்கு 500 ரூபாய் கொடுத்து உதவிய பள்ளி ஆசிரியருக்கு தனியார் வங்கி சிஇஓ தன்னுடைய வங்கியின் 30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கொடுத்து நன்றி செலுத்தியுள்ளார்.
ஏற்றிவிட்ட ஏணியை மறப்பவர்கள் தான் தற்போது அதிகம் உள்ளனர். பெரிய பதவிக்கு வந்தபின் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை பெரும்பாலானோர் மறந்துவிடுவார்கள். ஆனால் சென்னையை சேர்ந்த ஐடிஎஃப்சி பஸ்ட் பேங்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் வைத்தியநாதன் அப்படி அல்ல. இவர் பள்ளிப் படிப்பை டெல்லியில் முடித்தார். படிக்கும் போது இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது. நன்றாகப் படித்த அவருக்கு பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர வாய்ப்பு கிடைத்தது. நேர்முகத் தேர்வு மற்றும் கவுன்சிலிங்கிற்கு செல்ல அவருக்கு அழைப்பு கடிதம் வந்தது. ஆனால் செல்வதற்கு போதிய பணம் இல்லை.
பலரிடம் உதவி கேட்டும் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அறிந்த அவரது கணித ஆசிரியரான குர்தியால் சைனி, வைத்தியநாதனை அழைத்து, 500 ரூபாய் கொடுத்து நேர்முகத்தேர்வுக்கு சென்று வருமாறு கூறினார். கண்ணீர் மல்க அந்த பணத்தை வாங்கிச் சென்ற வைத்தியநாதனுக்கு பிர்லா இன்ஸ்டிடியூட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. நன்றாக படித்து பாசான வைத்தியநாதனுக்கு ஒரு முன்னணி தனியார் வங்கியில் உயர் பதவி கிடைத்தது. வேலை கிடைத்த பின்னர் தனது ஆசிரியருக்கு நன்றி செலுத்துவதற்காக தேடியபோது அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனாலும் மனம் தளராமல் தன்னுடைய ஆசிரியை தேடியபோது ஒரு நண்பர் மூலம் அவர் ஆக்ராவில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று தனது ஆசிரியரை பார்த்து, தான் தற்போது வங்கியில் உயர் பதவியில் இருக்கும் விவரத்தை கூறினார். அதைக் கேட்டு அந்த ஆசிரியரும் மகிழ்ச்சி அடைந்தார். வைத்தியநாதன் அதோடு நிற்க வில்லை....தற்போது தான் சிஇஓவாக பணிபுரிந்து வரும் ஐடிஎப்சி பஸ்ட் பேங்கின் ₹30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை தன்னுடைய ஆசிரியருக்கு கொடுத்து தனது நன்றிக் கடனை செலுத்தினார். இந்த விவரத்தை வைத்தியநாதனின் நண்பர் ஒருவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். தற்போது இது வைரலாக பரவி வருகிறது.