தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

by Balaji, Oct 8, 2020, 20:37 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (10.10.2020) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.சென்னை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Get your business listed on our directory >>More Tamilnadu News