வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சியமைக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு , சமூக வலைத்தளங்கள் மூலம் திமுக-வின் கொள்கைகளை, திட்டங்களை பரப்புதல் போன்ற பல்வேறு உத்திகளை திமுக கையாண்டு வருகிறது.
எனினும் ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோவாக கருதப்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சாதனமாக தேர்தல் அறிக்கை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கை என்றால்மற்ற கட்சிகளை விட ஸ்பெஷலாக இருக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கணிப்பு.
எனவே வரப்போகும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தேர்தல் அறிக்கையை தயாரிக்க இப்போதே திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக குழு ஒன்றை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அமைத்துள்ளார். 8 பேர் கொண்ட அக்குழுவில் டி.ஆர். பாலு , கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர் ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.